அறிமுகம்
பல்கலைக்கழக வாழ்க்கை மாணவச் சமுதாயத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். பாடசாலையில் குறிப்பிட்ட சூழலில் கல்வியை தொடர்ந்த மாணவர்கள் பல்கலாசார சூழலில் கற்கின்ற வாய்ப்பு கிட்டுகின்ற பொழுது, எதிர்காலத்தில் ஆளுமை மிக்க பிரஜைகளாக வலம் வர முடியும். பல்கலைக்கழகம் என்பது பல கலைகளை கற்க வந்த இடமாகும். பல்கலைக்கழக வாழ்க்கையை பயனுள்ளதாக நாம் கொண்டு செல்லும் பொழுது எண்ணில் அடங்காத நன்மைகளை அடைய முடியும் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.
இலங்கையின் கல்வி வரலாறானது இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையைக் கொண்டது. கல்வி என்பது அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகும். இலங்கையின் எழுத்தறிவு வீதமானது 92 வீதமாகக் காணப்படுகின்றது. இதனால், தெற்காசியாவிலேயே உணர்ந்த கல்வியறிவு கொண்ட நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தெற்காசியவிலேயே இலவசக் கல்வியை வழங்குகின்ற நாடாக இலங்கை திகழ்கின்றது. இந்நாட்டில் பாலர் கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரை முற்று முழுதும் இலவசமாகவே மாணவர்கள் கற்கின்றனர்.
இலங்கை சிறியதொரு நாடாக இருந்தாலும் கூட 17 பல்கலைக்கழகங்கள் எட்டுத் திக்கிலும் மாணவர்களடைய உயர் கல்விக்காக நிறுவப்பட்டுள்ளது. இந்த எல்லா பல்கலைக்கழகங்களிலும் இளநிலை பட்டப்படிப்புக்கள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. அதுமாத்திரமின்றி மாணவர்களின் நலன் கருதி மஹாபொல, பேசரி போன்ற உதவித் தொகையினை அரசு வழங்குகிறது. சர்வதேச ரீதியில் ஒப்பிடும் போது இலங்கை பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படுகின்ற இளங்கலை, முதுகலை, முதுதத்துவம், கலாநிதி முதலான பட்டங்கள் (Degree) பெறுமதியானவை. இது சர்வதேச நியமங்களைக் கொண்டே பார்க்கப்படுகிறது.
இவ்வாறான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் கற்கின்ற பொழுது சமூக மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி நிகழ்கின்றன. பல்கலைக்கழகத்தில் தொடரும் கல்விப் பயணமானது முக்கியமான கால கட்டமாகும். ஆனால், பெரும்பாலான மாணவர்கள் பல்கலைக்கழக வாழ்க்கையை உச்ச பட்ச வினைத்திறனாக பயன்படுத்திக் கொள்வதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
பல்கலைக்கழக வாழ்க்கையை வினைத்திறனாக எதிர்கொள்ளதிலுள்ள சவால்கள்
பல்கலைக்கழக வாழ்க்கையை வினைத்திறனாக பயன்படுத்துவதற்கு தடையாக உள்ள காரணிகளை நோக்கும் போது, அந்த தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னோக்கி செல்வதற்கான வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக அறியலாம்.
‘ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது’ என்பார்கள். வெறும் புத்தக படிப்பு மாத்திரம் வாழ்க்கைக்கு பயன் தராது. பல்கலைக்கழகம் புதியதோர் உலகைத் திறக்கின்றது. அந்த உலகில் சஞ்சரித்து பல புதிய அனுபவங்களைப் பெற்று தன்னை ஆளுமையுள்ள மனிதனாக வளர்த்துக் கொள்வது என்பது ஒவ்வொரு மாணவரினதும் கையிலேயே உள்ளது.
வெறுமனே பல்கலைக்கழகத்தை புத்தக படிப்பிற்கான ஒரு தளமாக நோக்காது அங்கு குவிந்து கிடக்கின்ற பல்கலாசாரத் தன்மை மற்றும் திறன் அபிவிருத்திக்கான களத்தினை இனங்காண வேண்டும். பல்கலைக்கழகமொன்றின் மாணவராக இந்த சூழலை கடந்து வருகின்ற பொழுது பல மாணவர்களுடைய உள மனப்பாங்கு மற்றும் நடத்தைசார் செயற்பாடுகளை உற்று நோக்கும் வாய்ப்பு காணப்படுகிறது.
அதில் ஒரு சாரார் பல்கலைக்கழக வாழ்க்கை வெறும் புத்தக படிப்பை மையமாகக் கொண்டது எனவும் இன்னொரு சாரார் களியாட்டங்களை கொண்டாடும் இடமாகவும் பயன்படுத்தி வருவதைக் காணலாம். புத்தகக் கல்வியோடு சேர்த்து கலாசார நிகழ்ச்சிகள் (Cultural event), கருத்தரங்குகள் (Seminar), விளையாட்டுக்கள், தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் (Career guidance), ஆய்வு மாநாடுகள் (Research conference), செற்பொழிவுகள், பட்டறைகள் (Workshop), கண்காட்சிகள் (Exhibition) முதலானவற்றில் மாணவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறான நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் பொழுது அறிவினை வளர்த்துக் கொள்ளலாம்.
எமது கற்றலானது கேட்டல், பார்த்தல் மூலம் இடம்பெறுகின்றன. கேட்டலே வினைத்திறனான கற்றலின் அடிப்படையாகும். நிகழ்ச்சிகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் போது எம்மை அறியாமலையே பல விடயங்கள் கற்றுக் கொள்வோம். இதனாலேயே திருவள்ளுவர் இவ்வாறு விளம்பியுள்ளார்.
“செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை”
பல்கலைக்கழக வாழ்வில் நாம் முன்னெடுக்கின்ற ஒவ்வொரு செயற்பாடுகளும் ஏதோவொரு விதத்தில் எதிர்காலத்தில் கைகொடுக்க வல்லது. ஆனால், மாணவர்கள் இதனை உணர்ந்து கொள்ள தவறுகின்றனர். குறுகிய மனப்பான்மை, தேடலின்மை, ஆர்வமின்மை, மனஉளைச்சல், சோம்பல், பல்கலைக்கழக சூழல் பற்றிய தெளிவின்மை, வீட்டு ஞாபகம் மற்றும் தன்னை பற்றிய சுயமதிப்பீட்டினை கொண்டிருக்காமை போன்ற பல்வோறு காரணங்களினால் பல்கலைக்கழகத்தில் குவிந்து கிடக்கின்ற வாய்ப்புக்களை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்வதில் தவறிழைக்கின்றனர்.
இதனால், அந்த சூழலில் இருந்து அந்நியப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், காரியாலயத்தில் உயர் பதவி வகிப்போர் போன்றோரின் பெயர்களைக் கூட அறியாது இருக்கின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்கள் எங்கு அமைந்துள்ளன என்பது கூட தெரியாமலையே பட்டப்படிப்பை முடித்து செல்கின்றனர். இந்நிலை தவிர்க்கப்படல் வேண்டும்.
எம்மை சுற்றியுள்ள சூழலை அறிந்து அதனை பயன்படுத்த முற்பட வேண்டும். அப்பொழுதே முழு மனதோடு பல்கலைக்கழகத்தில் கற்கின்ற மனப்பாங்கை உருவாக்கிக் கொள்ள முடியும். சூழலை பற்றிய தெளிவின்மையானது அந்த சூழலில் இருந்து பெறுகின்ற அனுபவங்கள் யாவற்றையும் கசப்பானதாகவே மாற்றும். இதனால், சில பல்கலைக்கழக மாணவர்கள் சவால்களை முகங்கொடுக்க தயக்கப்படுகின்றனர். எதிலும் ஈடுபாடு இல்லாது ஓடி ஒளிகின்றனர். சூழலில் இருந்து பெறுகின்ற அனுபவங்களை சீர்தூக்கி அதன் நன்மை தீமைகளை ஆராயாமல் விட்டு விடுகின்றனர். எல்லாவற்றிலும் நடுநிலமைத் தன்மையை பேண தவறுவதால் பல்கலைக்கழக வாழ்வை அனுபவிக்க தவறுகின்றனர்.
கருத்தரங்குகள், ஆய்வு மாநாடுகள், தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி, பாடநெறி முதலானவற்றில் கலந்து கொள்கின்ற பொழுது எமக்கான வழிகாட்டுதல்களைப் பெற முடியும். தனிப்பட்ட வளர்ச்சியினை எம்மால் எமக்குள் கொண்டு வர முடியமாக இருக்கும். எதிர்காலத்தில் எமக்கான தொழில் வாய்ப்புக்களை இனங்காணவும் அதற்கு ஏற்றாற் போல் திறன்களை விருத்தி செய்யவும் வழிகாட்டுதல்களை பல்கலைக்கழகம் வழங்குகிறது. இவை தேடல் உள்ள மாணவர்களுக்கே சாத்தியமாகும். இல்லையேல் அவை எட்டாக் கனியாகவே தென்படும் என்பதில் ஐயமில்லை.
எமது தேடல் விரிவடையும் போதே சிந்தனைத் திறன் விருத்தியடையும், எம்மை பற்றிய தெளிவான மதிப்பீடு தோன்றும், சுயமாக கருத்துக்களை உருவாக்கவும் தீர்மானங்களை எடுக்கவும் பழக்கப்படுவோம். இதன் மூலம் மாணவர்களாகிய எம்மால் தெளிவான இலக்குகளை நிர்ணயிக்க கற்றுக்கொள்ள வாய்ப்பு உருவாகும். இதனால், பல்பரிமாண ஆளுமை (Multi dimensional personality) கொண்ட மாணவ சமுதாயமாக எம்மை மாற்றிக்கொள்ள முடியும்
பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடையே ஆக்கத்திறன் சார்ந்த போட்டிகள் வைக்கப்படுவதுண்டு. கட்டுரை போட்டி, சித்திர போட்டி, கோலம் போடுதல், மாலை கட்டுதல், புகைப்பட போட்டி முதலியன இடம்பெறுகின்றன. இவற்றில் பங்கு கொள்ளும் பொழுது எமது திறமைகளை இனங்கண்டு கொள்ளலாம். இது மாணவர்களிடம் ஆர்வக் குவிப்பை ஏற்படுத்தும். ஆனால், பல மாணவர்கள் வீட்டு ஞாபகங்களினால் தங்களை வீட்டுச் சூழலிலேயே மிதக்க வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். பல்கலைக்கழகத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளாமல் சிறிய விடுமுறைகளுக்கு கூட வீடுகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால், தாம் தவறவிட்ட வாய்ப்புக்களையும் சின்ன சின்ன ஆசைகளையும் எண்ணி பிற்காலத்தில் வருந்துகின்றனர்.
பல்கலைக்கழகத்தின் இதயமாகத் திகழும் நூலகத்தினை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளன. நூலகம் பக்கம் மழைக்கும் ஒதுங்காத மாணவர்கள் பலர் உள்ளனர். இரவல் பெற முடியுமான புத்தகங்களின் எண்ணிக்கையைக் கூட மாணவர்கள் பலருக்குத் தெரியாது. பாடத்துறை சார்ந்த இலக்க பட்டியல் வரிசையை இனங்கண்டு புத்தகங்களை பெற அறியாது உள்ளனர்.
மாணவர்களின் உசாவுகை குறையும் போது கற்றலில் பின்தங்கிய நிலையே காணப்படும். மூத்த மாணவர்களின் (Seniors) குறிப்பு கொப்பிகளை நிழற்பட பிரதி எடுத்துக் கொண்டு, பாடங்களை தெளிவாக கிரகித்துக் கற்றுக் கொள்ளாமல் அரைத்த மாவையே அரைத்து, மனனத்தின் மூலமாக மாத்திரம் வினைத்திறனான கற்றலை மேற் கொள்ள முடியாது. இதன் மூலம் மாணவர்களின் சுய சிந்தனைத்திறன் தடைப்படுகிறது. வருடாந்தம் இரண்டு இலட்சத்திற்கும் குறையாத அளவில் மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முகங்கொடுக்கின்றனர். அதில் அண்ணளவாக இருபத்தி ஐயாயயிரம் மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படுகின்றனர். இவ்வாறு கடும் போட்டிகளிடையே பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் பலரிடம் அசமந்த (Laziness) போக்கையே காண முடிகிறது.
பல்கலைக்கழக வாழ்க்கையை வினைத்திறனாக மாற்றக்கூடிய நடைமுறைகள்
பல்கலைக்கழகத்தின் பெறுமதியினை உளப்பூர்வமாக அறிந்து நடப்பதானது ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். அத்தோடு, பல்கலைக்கழக வளங்களின் பெறுமதியினை மாணவர்கள் உணர வேண்டும். மக்களின் வரிப் பணத்தினால் இலவசமாகக் கற்கிறோம் என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். பல்கலைக்கழக வளங்களை முறையாகப் பயன்படுத்துவதோடு அதனை பேணிப் பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்று நடக்க வேண்டும். அப்பொழுதே பல்கலைக்கழக மாணவர்கள் ஏனையோருக்கு முன்மாதிரியாக (Role model) இருக்க முடியும். ஓரளவுக்காவது அவரவர் கற்கும் பல்கலைக்கழகம் பற்றிய விபரங்களை அறிந்து இருத்தல் வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் உள்ள பீடங்கள் (Faculty)இ துறைகள் (Department), வளாகங்கள் போன்றவற்றை அறிந்து கொள்கின்ற பொழுது பல்கலைக்கழகம் பற்றிய எண்ண மதிப்பீடு உயரும். சிறந்த பல்கலைக்கழகமொன்றில் பயில்கிறோம் என்ற எண்ணமானது மேலும் எம்மை வலுவூட்டச் செய்யக்கூடியதாக இருக்கும்.
பல்கலைக்கழக மாணவர்களின் வினைத்திறனான கற்றலுக்கு தடையாக அமைகின்ற மிக முக்கியமான பிரச்சினையாக ஆரோக்கியமான உசாவுகை இன்மை என்பதையும் குறிப்பிடலாம். மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் இடையே ஆரோக்கியமான உசாவுகை நிகழும் பொழுது மாணவர்களிடம் கற்றல்சார் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு கிட்டும். இதற்கு பெரும்பாலான மாணவர்கள் முயற்சி செய்வதில்லை. மாணவர்களிடம் இருக்கும் கூச்சத் தன்மை (shyness), ஆளிடைத் தொடர்பு (interpersonal communication) பேணாமை போன்றவை இதற்கு காரணமாகும். இது தவிர்க்கப்படும் பொழுது, கொள்ளல் – கொடுத்தல்கள் இடம்பெறும்.
மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரியாதவற்றை கேட்டறிவதோடு தமக்கு தெரிந்தவற்றையும் கூற வேண்டும். இது இரு சாராரினதும் அறிவு வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதனை திருவள்ளுவர் உரைக்கிறார்.
“கற்றார்முன் கற்ற செலச்சொல்லி தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்”
இன்றைய நவீன உலகில் தகவல் தொழிநுட்ப அறிவும் ஆங்கில மொழியறிவும் மிக முக்கியமான இரு தூண்களாக விளங்குகின்றன. பல்கலைக்கழகம் விட்டு வெளியேறும் போது உடனடியாக அரசு வேலைவாய்ப்பினை தர வேண்டுமென எதிர்பார்க்க முடியாது. தொழில் வாண்மை உள்ளவர்களாக எம்மை வளர்த்துக் கொள்ளும் போதே எம்மைத் தேடி தொழில் வாய்ப்புக்கள் வரும். நாம் தொழிலை தேடி அலைவதை விட தொழில் வாய்ப்பு எம்மைத் தேடி வரும் அளவிற்கு எம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதே போட்டி உலகில் எமக்கான தடத்தை பதிக்க முடியும்.
எனவே, பல்கலைக்கழகத்திலுள்ள வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி தகவல் தொழிநுட்பம், ஆங்கில மொழி, சிங்கள மொழி, ஆய்வு முறையியல் (Research methodology) போன்றவற்றைத் தேடி கற்க முயற்சி செய்ய வேண்டும். தொடர் பயிற்சி இருந்தாலே எமது விடாமுயற்சிக்கு பலன் கிடைக்கும். பல்கலைக்கழக மாணவர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள உளவள வழிகாட்டல் நிலையங்கள், மாணவர் நல மையங்கள், தொழில் வழிகாட்டல் அலகு முதலியவற்றை எமது தேவைக்கேற்ப பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். இவை மாணவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.
எமக்குத் தெரியாத புதிய வழிகாட்டல்களை நவீன போக்கிற்கு (New trend) ஏற்ப பெற்றுக் கொள்ள முடியும். பயிற்சி பட்டறை (Workshop), களப்பணி (field visit), குழுப்பணி (Group work), சமூக சேவை (Social work), கலை நிகழ்ச்சி (Cultural program) முதலியவற்றில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதே குழு மனப்பான்மை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், பண்பாடுகளை மதிக்கின்ற பழக்கங்களை எம்முள் ஏற்படுத்திக் கொள்ள முடியும். இது ஆரோக்கியமுள்ள மாணவச் சமுதாயத்தை உருவாக்க வித்திடும்.
முடிவுரை
இவ்வாறு பல்பரிமாண ஆளுமைக் கொண்ட மாணவச் சமுதாயம் உருவாகும் போது சந்தை உலகில் எமக்கான தனி இடத்தை பிடித்துக் கொள்ள முடிவதோடு தொழில்வாண்மை உள்ளவர்களாக எம்மால் உலகை வலம் வர முடியும். இது நாட்டினுடைய சமூக, பொருளாதார அபிவிருத்தியினை உயரத்திற்கு கொண்டு செல்லும். இன்றைய மாணவர்களே நாளைய சமுதாயத்தின் தூண்களாகும். நாம் முன்மாதிரியாக இருக்கும் போதே எம்மால் சிறந்த மாற்றங்களை உலகிற்கு கொண்டு வர முடியும்.
Credits:
எம்.எச்.ஹப்ஸா
2020/A/081
மூன்றாம் வருடம்
தமிழ்த்துறை (சிறப்புக்கலை)
கலைப்பீடம்
Read more: