கல்வியும் கலாசாரமும் (Education and Culture)

கல்வி கலாசாரம் என்றால் என்ன?

கல்வியும் கலாசாரமும்
கல்வியும் கலாசாரமும்

கல்வி மற்றும் கலாசாரம் இவையிரண்டும் பிரிக்க முடியாததாக இருப்பதுடன் அவை ஒன்றையொன்று சார்ந்ததாகவே உள்ளது. கல்வி என்பதையும் கலாசாரம் என்பதையும் துல்லியமாக சித்தரிக்க முடியாது. இவையிரண்டுக்கும் இடையிலான புரிந்து கொள்ளலும் சிக்கலானதாகவே உள்ளது. எனினும் கல்வி நமது பாரம்பரியத்தின் முக்கிய கூறுகளை பாதுகாக்க உதவ வேண்டும் என்பதே பல தரப்பினரும் கருத்தாகும்.

எல்லா மக்களும் கல்வியை பெற வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும். நாம் கற்கும் போதே நம் வாழ்க்கையில் நடக்கும் பல விடயங்களையும், அவை எதனால் ஏற்படுகிறது என்பதையும் புரிந்து கொள்கிறோம். குழந்தை ஒருவரிடம் திறன்களை வளர்த்து சாதாரண வாழ்க்கை முறையை வாழ அறிவை வளப்படுத்தும் கலாசாரம். எனவே கல்வி அவர்களின் இயற்கை பாரம்பரியத்தையும் அதிகளவு தாக்கம் செலுத்தக் கூடிய வகையில் காணப்படுவதுடன் அவை நாட்டுக்கு நாடு மாறுபாடுடைய தன்மையும் காட்டுகின்றது. எந்தவொரு கல்வி முறையும் ஒரு சமூகத்தின் கலாசார வடிவங்களிலிருந்து அதன் வழிகாட்டுதலைப் பெறுகின்றது.

உதாரணமாக எடுத்துக் கொண்டால், ஆன்மீக கலாசாரம் கொண்ட ஒரு சமூகத்தில் கல்வியானது ஆன்மீக ரீதியிலும் ஒழுக்க கல்வி, மதிப்புகள் ரீதியிலும் அமையும். மாறாக ஒரு சமூகத்தின் கலாச்சாரம் பொருள் சார்ந்ததாக இருப்பின் அது கல்விமுறையிலும் பொருள் சார்ந்த மதிப்புகளையும் வசதிகளையும் அடைவதாக அமைக்கப்படும். எந்த ஒரு கலாசாரத்தை பின்பற்றாத சமூகமானது நிச்சயமாக ஒரு கல்வி அமைப்பாக செயற்பட முடியாது. எனவே ஒரு நாட்டின் கலாசாரம் அதன் கல்வி முறையில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது.

கலாசாரம் பற்றிய வரைவிலக்கணங்கள்

கலாசாரம் என்றால் என்ன? - What's culture?
கலாசாரம் என்றால் என்ன?What’s culture?

கலாசாரம் தொடர்பில் பல்வேறு அறிஞர்களும் பல்வேறு வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளனர். லின்டன் என்பவர் (1945) குறிப்பிட்ட சமூகத்தின் உறுப்பினர்களின் வாழ்க்கை நெறி தலைமுறை தலைமுறையாக பேணப்பட்டும் கையளிக்கப்பட்டும் பின்பற்றப்பட்டும் வந்த கொள்கைகள் பழக்கவழக்கங்கள் என்பவற்றின் தொகுப்பு என்கிறார். சி குளுக்கோல்ன் (1951) குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாழ்வின் வடிவமைப்பு கலாசாரம் என்கிறார். இவ்வாறு பல வரைவிலக்கணங்கள் காணப்படினும் கூட பொதுவாக மனிதனின் அனைத்து செயற்பாடுகளும் கலாசாரம் என கூறலாம். அந்த வகையில் கலாசாரத்தின் இரு பிரதான பண்புகளாக கற்கப்படுகின்றது (கற்றல்), பின்பற்றப்படுகின்றது (நிற்றல்).

கல்வி மற்றும் கலாசாரத்துக்கிடையிலான தொடர்பு

ஒரு சமூகத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக இந்த கலாசாரம் இருப்பதுடன் கல்வியில் கலாசாரத்தின் பங்களிப்பை அதிகம் முன்னிறுத்துகின்றது. கல்வியின் நோக்கங்களில் மிகவும் அடிப்படையான நோக்கமாக இந்த கலாசாரம் காணப்படுவதுடன் கல்வியின் இலக்குகளும் தேவைகளும் காலமாற்றங்களுக்கேற்ப மாற்றம் அடைய வேண்டும் எனும் சிந்தனைக்கமைவாக கலாசார மாறுதலூடாக கல்வியின் இலக்குகள், தேவைகள் தீர்மானிக்கப்படுகின்றது. ஒரு கல்வி திட்டமிடலினை உள்வாங்கும்போது அது கலாசாரத்திலும் தங்கியுள்ளது எனலாம். ஒரு நாட்டுக்கான கலைத்திட்டம் உருவாக்கப்படுகின்றது என்றால் அந்நாட்டினுடைய கலாசார அடிப்படையில் அதன் தேவைகள் பொறுத்து இந்த கலைத்திட்டமானது உருவாக்கப்படுகின்றது எனவும் கூறலாம்.

கல்வியின் முக்கிய நோக்கம் சமுதாயத்தில் நாகரீகத்தை கொண்டு வர வேண்டும் என்பதாகும். கல்வி மேம்பாடு என்பது நல்வாழ்வை கொண்டு வருவதில் முக்கியம் பெறுகின்றது. ஒரு தனி நபர் கலாசார ரீதியில் சிறந்த மதிப்புகளை பெற்றால் தான் அவன் பெற்ற கல்வியினால் பயனுண்டு என்பர். அந்தவகையில் சமூகம், கல்வி, கலாசாரம் மூன்றும் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதை நாம் காணலாம். கல்விக்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலான உறவை பிரிக்க முடியாது. மனித வாழ்க்கையில் கலாசாரம் முக்கியம் பெறுவது மறுக்க முடியாத ஒன்றாக இருப்பதுடன் அந்த கலாசாரம் கல்வியிலும் தனது சாதக, பாதக நிலைமைகளை தோற்றுவிக்கின்றது எனலாம்.

அனைத்து கலாசார அடிப்படைகளையும் புரிந்து கொள்வதில் பல்வேறு வகையிலும் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. கலாசாரத்தை கற்றல் மற்றும் அனுபவம், அறிவாற்றல், செயல்முறை போன்றவற்றை சமூகத்திற்கு வழங்குவதில் கல்வி இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. சமூகத்தில் சீரிய விழுமியங்களை வளர்த்தெடுப்பதில் கலாசாரத்தையும் அதனுடனான கல்வியையும் வழங்குவது முக்கியமாகும். கல்வியானது ஒரு தனி மனிதனின் கலாசாரத்தை பாதிக்கிறது, அதே நேரம் கல்வியின் மூலம் ஒரு நபர் கலாசார விழுமியங்கள் பலவற்றையும் கற்றுக் கொள்கிறான். ஒவ்வொரு தனி மனிதனும் சமூகத்தை முன்னேற்ற வேண்டுமாயின் அதற்கு இந்த கலாசாரம் எவ்வளவு முக்கியமாக உள்ளதோ அதுபோலவே கல்வியும் இந்த கலாசாரத்தை வழங்குவதில் முக்கியமாக அமைகின்றது.

பாடசாலைகளில் கல்வியும் கலாசாரமும்

பாடசாலைகளில் கல்வியும் கலாசாரமும்
பாடசாலைகளில் கல்வியும் கலாசாரமும்

பாடசாலை எடுத்துக் கொண்டால் பாடசாலைக்கென தனியான கலாசாரம் காணப்படுகின்றது. பாடசாலைக்கு வருகை தர வேண்டிய நேரம், பாடசாலை விட்டு வெளியேற வேண்டிய நேரம், பாடசாலையின் நேர சூசி, காலை கூட்டம், இடைவேளை என அனைத்தும் பாடசாலையினுடைய கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாமல் வகுப்பில் அமைதியாகவும் மரியாதையுடனும் மாணவர்கள் நடந்து கொள்ளவும், ஆசிரியர்கள் அதிபர் போன்றோரை மதிப்பதற்கும், பாடசாலையின் ஒழுக்ககோவையை மதித்து அதன்படி நடப்பதற்கும் பாடசாலை கலாசாரமானது பல்வேறு வகையிலும் உதவி புரிகின்றது. அதே நேரத்தில் பாடசாலையில் கற்பிக்கப்படும் குடியியற் கல்வி பாடமானது பல்வேறு வகையிலும் மாணவனுடைய சீரிய கலாசாரத்தை பேணுவதாகவும் அவற்றை சமூகத்தில் பயன்படுத்தக்கூடியதாகவும் அமைகிறது.

கல்வி கலாசாரத்தின் பிணைப்பு

கல்வி கலாசாரத்தின் பிணைப்பு
கல்வி கலாசாரத்தின் பிணைப்பு

பொதுவாக கல்வி மக்களை அவர்களின் கலாசாரத்தோடு இணைக்கும் இணைப்பு பாலமாக இருக்கிறது எனவும் கூறப்படும். கல்வியின் மிக முக்கியமான பாத்திரங்களில் ஒன்றுதான் ஒவ்வொரு நபரின் கலாசாரத்துடன் இணைப்பதற்கான ஒரு வழியாக காணப்படுகின்றமை. இதன்படி மாணவர்கள் தங்கள் கற்றலுடன் தொடர்பை ஏற்படுத்தும் போது ஒருவரின் கலாசாரத்துடன் தொடர்புடையதாக கல்வி அமையும் போதே அது மிகவும் பயனுள்ளதாக அமையக்கூடும். கலாசார ரீதியில் மாணவர்களை வழிப்படுத்தும் கல்வி நிறுவனங்களாக மழலையர் பள்ளி, பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி சமூகங்கள், தேவாலயங்கள் போன்றன காணப்படுகின்றன. ஒரு தலைமுறையை நாம் நோக்கினால் அதன் வரலாறு, மரபுகள், பழக்கவழக்கங்கள் போன்றன கல்வியினூடாக கற்பிக்கப்படுகின்றது. அந்தவகையில் அவர்களது தலைமுறையில் ரீதியில் கற்கும் போது எமது கலாசாரம் என்ன? அதில் தற்போதைய நிலையில் எவை விடுபட்டுள்ளது என்பது தொடர்பாக அதிகளவு சிந்திக்க வைக்கிறது.

கல்வியும் கலாசாரமும் என்று நோக்கும் போது கலாசார மாற்றத்தினால் கல்வியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு சாதகமான விடயங்கள் தொடர்பில் நாம் கட்டாயம் நோக்க வேண்டியதாகவே உள்ளது. கலாசார அல்லது சமூக பாரம்பரியத்தை பாதுகாப்பதில் உதவுவதில் இந்த கல்வி முக்கிய இடத்தினை பெறுகின்றது. கல்வி கலாசாரத்தின் சிறப்புகள், மரபுகள், பழக்கவழக்கங்கள், மதிப்புகள், கலைகள், ஒழுக்கநெறிகள் போன்றவற்றை மாணவர்களுக்கு கற்பிக்கின்றது. கலாசாரத்தை பாதுகாப்பதுடன் அதனை அடுத்த தலைமுறையினருக்கு கையளிக்கும் ஒரு ஊடகமாக கல்வி காணப்படுகின்றது. கலாசாரத்தை தொடர்ச்சியாக பராமரிப்பதும் இந்த கல்வியாகவே உள்ளது.

கல்வியின் அடுத்த முக்கிய நோக்கமாக காணப்படுவது கலாசாரத்தை மேம்படுத்துவதுடன் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் செயல்படுவதாகும். ஒரு கலாசாரத்தை பின்பற்றக்கூடிய சமூகத்தினருக்கு எது தேவையாக காணப்படுகின்றது, அவர்களின் அனுபவங்களை தொடர்ந்து என்ன விடயங்கள் மறு சீரமைக்கப்பட வேண்டும் என்றவாறு கல்வியானது கலாசாரத்தை சீர்திருத்துவதாக உள்ளது. மாறிவரும் கலாசாரத்திற்கேற்ற மனிதனை சித்தப்படுத்துவதாக கல்வியானது அமைகின்றது.

புதியவற்றை தங்களுக்கேற்றவாறு சிறந்த முறையில் எவ்வாறு பயன்படுத்தலாம், அதனுடாக கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் கல்வியிலும் அதனை எவ்வாறு கொண்டு நடத்தலாம் என்ற ரீதியில் செயற்படுகின்றது. ஆளுமை உருவாக்குதல் கல்வியால் வடிவமைக்கப்பட்டு அது கலாசாரத்தின் மூலமாக கொண்டு செல்லப்படுவதும் உலகளாவிய தன்மை கொண்டதாக காணப்படுகின்றது. தற்போதுள்ள சமூக நடத்தை முறைகளை கலாசாரத்தின் படி கல்வியால் எவ்வாறு சாத்தியப்படுத்த முடியும் என்பது தொடர்பிலும் இங்கு சிந்திக்கப்படுகின்றது.

சமூகத்தில் எந்த ஒரு சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கவும் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு வழிமுறையாக காணப்படுவது இந்த கலாசார ஈடுபாட்டின் மூலம் கற்றலை வழங்குதல் எனலாம். கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் திட்டங்களில் கலாசாரத்துறை மீது ஒரு உந்துதலும் சிறப்பு கவனமும் செலுத்தப்படுகின்றது. கலாசாரத்தை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்கள் பல்வேறு வகையாக தனது பங்கினை செலுத்தி வருகின்றது. அனைத்து கலாசார நெறிமுறைகளையும் கற்றுக் கொள்வதற்கு இந்த கலாசாரம் அடிப்படையாக அமைவதுடன் இந்த கலாசாரமானது ஒரு நபர் இயற்கை மற்றும் சமூக சூழ்நிலையில் ஒரு நேர்மறையான வழியில் ஏற்றுக் கொள்வதும் கலாசார கல்வியின் வழியே நடைபெறுகின்றது.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதற்கு அமைய கலாசாரமும் மாற்றங்களை உள்வாங்கிய வண்ணமே உள்ளது. பொதுவான மொழி நடையில் கலாசார மாற்றம் என்பது மக்களின் வாழ்வியலை முன்னேற்றும் பொருட்டு மக்களின் வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள், தகவல் தொடர்புகள், நடத்தைகள், மரபுகள், தொழில் முயற்சியாண்மை, நம்பிக்கைகள், மதிப்புகள், ஆடைகள், வடிவங்கள், கருவிகள், கல்வி முறைகள் மற்றும் அறிவில் ஏற்படுகின்ற மாற்றங்கள் எனலாம்.

இந்த அடிப்படையில் கலாச்சார மாற்றத்தின் விளைவினால் கல்வியில் சாதகமான விளைவுகளும் காணப்படுகின்றன. அதே நேரம் பாதகமான விளைவுகளும் காணப்படுகின்றன. சாதகமான விளைவுகளாக ஆரம்பத்தில் இருந்த சிற்றூர் பள்ளிகளானது காலப்போக்கில் இலவச கல்வி வழங்கும் பாடசாலைகளாக மாற்றப்பட்டமை, கல்வி முறையில் ஏற்பட்ட கலாச்சார மாற்றமானது ஏட்டுக்கல்வியை வெகுவாக குறைத்து அனுபவக் கல்வியை உருவாக்கியது, ஆசிரியர் மையக் கல்வியானது மாணவர் மையக் கல்வியாக உருவாக்கம் பெற்றமை, தொழில் முயற்சியாண்மையில் ஏற்பட்ட கலாச்சார மாற்றமானது இன்றைய புலன் தழுவிய கற்றலுக்கு தொலைக்கல்வியில் உள்ளது என்றால் மிகை ஆகாது.

சிற்றூர் பள்ளிகளில் வழங்கப்பட்ட கல்வியானது அதன் வடிவங்களில் மாற்றம் ஏற்பட்டு பாடசாலைகள் எனும் கட்டிடங்களாக மாற்றப்பட்டதுடன் அங்கு பல்வேறு தளபாட உபகரணங்களும் அறிமுகமாகியதுடன் கொரோனா அச்சுறுத்தலின் பிற்பட்ட காலத்தில் நிகழ்நிலை கல்வி என்ற ரீதியிலும் வளர்ச்சி பெற்றமை, அதே நேரம் எழுத்துக்கள் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் விளையாட்டுக்கும் வழங்கப்பட்டதுடன் கலைத்திட்டத்திற்கு மாத்திரம் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இணைக்கலைதிட்டத்திற்கும் வழங்கப்பட்டது. மேலும் பாடசாலை மட்டத்தில் இலவச மற்றும் வெண்மை நிற சீருடை பாடசாலை கலாசாரத்தை பொருத்தவரை ஒரு பொதுமை தன்மையை கொண்டுவரக்கூடியதாக அமைந்தது. மட்டுப்படுத்தப்பட்ட பாடசாலைகள் பரவலாக்கப்பட்டதுடன் சமய பாடங்கள் மாத்திரம் அல்லாது சமூகமயமாக்கல் சார்ந்த பாடங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.

கல்வியானது வெறுமனே போதிக்கப்படுவதோடு நின்று விடாமல் தொழிற் பயிற்சி வழங்குவதாகவும் மாற்றப்பட்டதுடன் கல்வியில் புதிய தொழில்நுட்ப சாதனங்கள் பாவனைக்கும் உட்படுத்தப்பட்டது. கட்டாய பாடத்துடன் நின்ற கல்வி முறை விருப்பத்தேர்வுகளுக்கும் முன்னுரிமையளிக்கப்பட்டது. கல்வியில் பெண்களுக்கும் சம சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு கற்றல், கற்பித்தல், கற்பித்தல் முறைகள், மதிப்பீட்டு முறைகள், கலைத்திட்டம் என்றவாறு பல்வேறு ரீதியில் இந்த கலாச்சார மாற்றமானது கல்வியில் அதிகளவு பங்கினை வழங்கியுள்ளது. இவ்வாறு பல்வேறு முன்னேற்றங்கள் கலாச்சார மாற்றத்தினூடாக கல்விக்கு கிடைக்கப்பெற்றாலும் கூட அதனுடன் தொடர்புடைய விமர்சனங்களும் காணப்படுகின்றன.

அந்தவகையில் இலங்கை பாடசாலைகளுக்கு செய்து கொடுக்கப்படும் வசதிகள் 1AB பாடசாலைகளுக்கும் வகை1, வகை3 பாடசாலைகளுக்கும் இடையே இருமை போக்கு காணப்படுகின்றமை, மேற்கத்தைய கலாசார கலப்பு மாற்றத்தினால் பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை மேலோங்கியமை, கலாசார மாற்றம் தந்த கல்வியின் உண்மையான அனைவருக்கும் கல்வி, இலவச கல்வி என்பன டியூசன் என்ற பெயரில் விலை பேசி விற்கப்பட்டமை, அந்நிய கலாசார மாற்றமும் அதன் இலங்கை கலப்புமே இன்றைய எம்மில் பலரின் பாரம்பரிய ஆடை அணிகலன்கள் உணவு முறை, நடை, உடை, பாவனைகள் கற்றல் இடங்களில் கூட பல்வேறு வகையில் கீழ்த்தரமான நிலைக்கு தள்ளியுள்ளதுடன் மாணவர் மையக் கல்வி எனக் கூறிக்கொண்டு ஆசிரியர் மையக் கல்வியை அதிகளவு நடைமுறைப்படுத்தப்படுத்துகின்றது.

முடிவுரை

அந்தவகையில் ஒட்டுமொத்தமாக நோக்குவோமாயின் பொதுவாக மக்களின் வாழ்வியலை முன்னேற்றும் செயன்முறையே கலாச்சாரம் எனலாம். அதில் கொண்டு வரப்படும் மாறுதல்கள் கல்வியில் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் கூட அவை பாதகமான நிலைமைகளையும் சமூக ரீதியில் ஏற்படுத்துகிறது. இவ்வாறு கல்வியும் கலாசாரம் பல்வேறு வகையில் ஒரு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரணியாக உள்ளது.

Credit:

கனேசன் பவித்ரா,
நான்காம் வருட கல்வியியல் சிறப்புக்கற்கை மாணவி,
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை,
கலை கலாசாரபீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம்.
வந்தாறுமுலை.

Read more:

Sharing Is Caring:

Leave a Comment